Tuesday, August 09, 2005

உயர்வு நவிற்சி

உண்மையில் நான் கோதை என்ற கவிஞியின் ரசிகன். மனதில் துளி கூட கலப்பில்லாத அன்பு இருந்தாலேயொழிய அவ்வளவு காதலாக பாட்டு எழுத முடியாது. பெண்களுக்கு நமது சமூகத்தில் முன்பு இருந்த கருத்துச் சுதந்திரத்தையும் அவருடைய பாடல்கள் எனக்கு எடுத்துக்காட்டின.

மேலும் அவருடைய பாடல்களில் உள்ள வளமையும் மனதைக் கவரக்கூடியது.

என் பள்ளி நாட்களில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, பாடப் புத்தகத்தில் உள்ள பாடல் ஒன்று கீழ்வரும் அர்த்தத்தில் இருந்தது,

"பகற்கால வானத்தைப் பார்த்தால் கிழிந்த கூடாரம் போல இருக்கிறது. வானம் கூடாரம் போலவும் மேகங்கள் கிழிசல்கள் போலவும் இருக்கின்றன.

இரவுக்கால வானத்தைப் பார்த்தால் செல்லரித்த குடை போல இருக்கிறது. வானம் குடை போலவும் நட்சத்திரங்கள் சிறு சிறு துளைகளாகவும் தெரிகின்றன"

(கவிஞர் பெயர் மறந்துவிட்டது)

இதை நான் படித்துக்கொண்டிருந்தபோது என்னுடய அம்மா கேட்டுவிட்டு (இப்பாடலை எழுதியது நீங்களாக இருந்தால் இதற்கு மேல் இந்தப் பத்தியைப் படிக்க வேண்டாம்) "யார்டா இவன் சுத்த தரித்திரம் பிடித்தவனாக இருக்கிறான். உவமையைப் பார் கிழிந்த கூடாரமாம், செல்லரித்த குடையாம். இப்பிடி எழுதினா விளங்குமா?" என்றார்.

"யாராவது வறுமையில் வாடும் கவிஞனாக இருந்திருப்பான்" என்றேன்.

அம்மா "அதற்காக இப்படியா! பாரதியாரைப் பார் இதே வானத்தை கருநீலப் பட்டின் மேல் வைரங்கள் பதித்தது போல் என்று வர்ணித்தார். எண்ணங்கள் எப்போதும் உயர்வாக இருக்க வேண்டும்." என்றார்.

கோதையினுடைய பாடல்கள் எப்பொழுதும் உயர்வானதாகவே இருக்கும். படிக்கும் பொழுதே மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

"நெற்க்கதிர்கள் செழித்து வளரும், பாற்க்குடங்கள் நிரம்பி வழியும்"

என்றெல்லாம் வாசிக்க மனதிற்கு மிக்க இனிமையாக உள்ளதா இல்லையா?

11 Comments:

Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் பதிவு கோதை பற்றி என்றால் அவருடைய கவிதைகளில் எதையேனும் மேற்கோள் காட்டி இருந்தீர்களானால், சுட்டி கொடுத்திருந்தீர்களானால் சிறப்பாக இருந்திருக்கும். அது இல்லாதது இந்தப் பதிவிற்கு ஒரு குறையே.

1:26 PM  
Blogger Ramesh said...

நன்றி செல்வராஜ். முன்பதிவுகளில் குறிப்பிட்ட பாசுரத்தைப் பற்றியது என்பதாலும், தம்பி கணேஷுக்கு கொடுத்த மறுமொழியின் தொடர்ச்சி என்பதாலும் மேற்கோள் காட்டாமல் விட்டுவிட்டேன். நான் குறிப்பிட்ட பாசுரம் என் முதல்ப்பதிவில் உள்ள "ஓங்கி உலகள்ந்த உத்தமன்.." என்று தொடங்கும் திருப்பாவை மூன்றாம் பாடல்.

திருப்பாவை பாடல்களை தமிழில் வாசிக்க கீழ்க்கண்ட தளத்துக்குச் செல்லலாம்.

http://www.thehindutemple.ca/TamilMargazhiIntro.htm

2:13 PM  
Blogger Ganesh Gopalasubramanian said...

அண்ணா !

நல்ல பதிவு.

கவிதை என்பது அனைத்து உணர்ச்சிகளையும் தாங்கி நிற்கும். எல்லோராலும் எப்பொழுதும் சந்தோசமான மனநிலையிலேயே இருக்க முடியாது. "கருநீலப் பட்டின் மேல் வைரங்கள் பதித்தது போல்" என எழுதிய பாரதியும் "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்" என அறிவுடன் படைத்ததற்க்காய் அழுகின்றான் (ஜெயகாந்தன் பாராட்டு விழாவில் இளையராஜா கூறியது).

எனினும் உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன் விஷயம் இதுதான் உயர்வானவற்றை உயர்வான நோக்கில் சிந்திக்க வேண்டும் வருத்தப்பட வேண்டிய விஷயங்களுக்கு வருத்தப்பட வேண்டும். ஆகையால் "செல்லரித்த குடை" போன்ற உவமைகள் கவிஞனின் கற்பனைக்கு மட்டுமே தீனி போடும். கருத்திற்கும் கற்பனைக்கும் ஒருவித ஒவ்வாமையே இருக்கும்.

தொடர்க உங்கள் சேவை

9:30 PM  
Blogger Ramesh said...

எல்லோராலும் எப்பொழுதும் மகிழ்வான மனநிலையில் இருக்க முடியாது என்பது உண்மைதான். சோகப்பாடல்கள் பாடக் கூடதென்று கூறவில்லை. இந்த் குறிப்பிட்ட கவிதை வருத்தத்துடன் எழுதப்படவில்லை ரசித்து எழுதப்பட்டிருக்கிறது ஆனால் உவமைகள் சிறப்பாக இல்லை என்பதுதான் என் கருத்து. நம்முடைய எண்ணங்கள் நம்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும். குறிப்பாக கவிஞர்களுக்கு இது மிகத் தேவை. அவர்களால் சமூகத்தின் எண்ணங்களை மாற்றியமைக்க முடியும்.

மேலும் தமிழ்க்கவிகளுக்கு அறம் பாடும் தன்மை உண்டு. அறம் பாடுதலைப் பற்றி நான் அறிந்தவற்றை பின்னொரு பதிவில் கூறுகிறேன்.

அதனால்தான், என்னுடய நினைவுகள் சரியாக இருந்தால், "மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற வார்த்தைகள் பெரும் கண்டனத்துக்குள்ளானது. பின்னர் அது "மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று மாற்றப்பட்டது.

1:39 AM  
Blogger Ganesh Gopalasubramanian said...

// நம்முடைய எண்ணங்கள் நம்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும். குறிப்பாக கவிஞர்களுக்கு இது மிகத் தேவை. //
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

இந்தியா டுடேவிலோ அவுட்லுக்கிலோ சென்ற ஆண்டின் மகத்தான சக்திகள் (POWER 50) என ஒரு ஐம்பது பேர் கொண்ட பட்டியல் இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. டாட்டா, விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகிய தொழில்நுட்ப நிறுவன அதிபர்களையும், சஹாரா,NDTV போன்ற டிவி நிறுவன அதிபர்களையும் அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களையும் தவிர்த்து பார்த்தால் பெரிய சக்திகளாக இருப்பவர்கள் கவிஞர்களே வைரமுத்துவும் ஜாவித் அக்தரும் அந்தப் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்கள்.

// "மெல்லத் தமிழ் இனிச்சாகும்" //
நீங்களுமா

6:03 AM  
Blogger கருப்பு said...

அருமையான பதிவுகள். நல்ல இலக்கிய ஆர்வம் உங்களுக்கு இருக்கிறது ரமேஷ். நன்றி.

8:21 PM  
Blogger Ramesh said...

நண்பரே, பெரிய பனிக்கட்டியைத் தூக்கி தலையில் வைச்சுட்டீங்களே. சும்மா நுனிப்புல் மேஞ்சது இதெல்லாம். இருந்தாலும் உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றி.

பி.கு: இப்படி பேசுனா "ஆகா! என்ன தன்னடக்கம்" அப்படின்னு பாராட்டுவீங்கன்னு ஒரு நப்பாசைதான்...:). ஆனா நுனிப்புல் விஷ்யம் உண்மைதான்.

9:00 AM  
Blogger G.Ragavan said...

ரமேஷ். கவிஞி என்று அழைக்க வேண்டியதில்லை. கவிஞர் என்பதே இருபாற்சொல்தான்.

கோதை என்ற பெயரை விட ஆண்டாள் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

"கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்" என்பார் கண்ணதாசன்.

வட்டார வழக்கு மொழியில் எழுந்த நூல்களில் ஒன்று திருப்பாவை. அதற்கு முன்னமே சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் வழிகாட்டினாலும் திருப்பாவையும் சிறப்பானதே.

ஆனால் உயர்ந்த கருத்துள்ள வரிகள் எல்லா இடங்களிலும் சொல்ல முடியாது.

"பேச வந்த தூத செல்லரித்த ஓலை செல்லுமோ" என்கிறான் குறவர் தலைவன். மன்னனுக்குப் பெண் கேட்டு குறவரிடம் வந்திருக்கிறான் தூதன். அவனிடம் சொல்லும் பொழுது இப்படித்தான் சொல்ல வேண்டும்.

திருப்பாவை போன்ற பக்தி நூல்களை எழுதும் பொழுது ஆண்டாள் அப்படிப் பயன்படுத்தியுள்ளது சரியே. அது போல மற்றவர்கள் செய்வதும் சரியே.

ஆடு கத்திரிக்காயை கத்திரிக்காயாகவே பார்க்கும். மனிதன் கத்திரிக்காய் வதக்கலாக பார்க்கிறான் அல்லவா. அப்படித்தான்.

3:13 AM  
Blogger Ramesh said...

கருத்திட்டமைக்கும் தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி ராகவன்.

உயர்ந்த கருத்துக்களை எப்பொழுதும் கூறவியலாது என்பது உண்மைதான். என்னுடைய வாதமெல்லாம் மக்களின் மனோநிலையை மாற்றக்கூடிய சக்தியுள்ள கவிஞர்கள் உரியவாறு பாடவேண்டும். மேலும் கவிஞர்கள் வாக்கு சற்று விவகாரமானது.

இதைப் படித்துவிட்டு கவிஞர்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் பாடல் வராது என்று கூறலாம். கருத்துச் சுதந்திரம் பற்றி கேள்வி எழலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் முழு சுதந்திரம் இருந்தாலும் இந்த சமூகத்திற்கு தீயதை செய்ய இயலாது அது போலத்தான் இதுவும் என்பது என் கருத்து. (முழுக்க அது போல் இல்லாவிட்டாலும் ஒரு 'நெறிமுறை' guideline மாதிரியாகவாவது இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்).

7:15 PM  
Blogger G.Ragavan said...

இல்லை ரமேஷ். கவிஞர்களுக்கு எந்த வரைமுறையும் தேவையில்லை. தேவையுள்ளவன் கவிஞனில்லை. கவிஞனுக்கு வேண்டியவை மூன்று.
1. நடுநிலைமை
2. சமூக அக்கறை
3. மொழியாளுமை

இவை மூன்றும் இந்த வரிசையிலேயே வர வேண்டும். வந்தால்தான் நல்ல கவிதை வரும். கவிதைக்குண்டான விளைச்சலும் கிடைக்கும்.

*************************************

நேரம் கிடைத்தால் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு படித்துப் பாருங்கள். அப்படியே சிலப்பதிகாரமும். சிலப்பதிகாரம் எனக்குப் பிடித்த நூல்களுள் ஒன்று. கம்பனைக் கொண்டாடுவார்கள் எல்லாரும். கம்பன் செய்ததை விட பல மடங்கு சிறப்பாக அவனுக்கும் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னால் இளங்கோ செய்து விட்டான்.

மலைவளப் பாடல்களும், கானல் வரியும் நெஞ்சையள்ளும். போர்க்களக் காட்சியில் வீரம் விளையும். கொஞ்சம் அச்சம் வரும். சுருக்கமாச் சொன்னா அவரு பெரிய தில்லாலங்கடிங்க.

5:40 AM  
Blogger Ramesh said...

என்னுடைய முந்தைய கருத்து கவிதைகள் பற்றிய எனது கருத்துக்களுக்கு ஒரு வித பொதுத்தன்மையை (generalization) கொண்டு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

கவிதைகள் உணர்ச்சிகளை, சிந்தனைகளை தாங்கி வருபவை. அவைகளை தடுப்பது சிந்தனைகளைத் தடுப்பது போன்றது. நான் கூற விழைந்தது அந்த அர்த்தத்தில் அல்ல.

நீங்கள் சொல்லும் அதே சமூக அக்கறையைப் பற்றித்தான் நானும் பேசுகிறேன்.

கவிதை வாசகர்களை கவிஞனின் மனநினைக்கு கொண்டு செல்லக்கூடியது. அப்படிச் செல்லும்போது -வெ பாடல்கள் -வெ மனநிலையையே ஏற்படுத்துகின்றன. இவ்வகைப் பாடல்கள் சமூதத்திற்கு எவ்வித நன்மையையும் ஏற்படுத்தாது என்பது என் எண்ணம்.

சில பாடல்கள் -வெ போல தொனித்தாலும் அதன் அர்த்தம் +வெ ஆக இருக்கும் எ.க. வஞ்சப்புகழ்ச்சி அணியில் அமைந்தவை. அவை இந்தப் பிரிவில் வரா.

இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டிருந்த கவிதை -வெ பிரிவில் வருவதாக எனக்குத் தோன்றியது அதனால் அதைப் பதித்தேன்.

மற்றபடி சிலப்பதிகாரம் 'தேரா மன்னா..' வை மனனம் செய்ததோடு நின்றுவிட்டது. மேலும் பல தமிழ் நூல்களையும் முழுவதும் வாசிக்க வேண்டும் என்று ஆவல் வந்திருக்கிறது. அதற்கு சமீப காலமாக நீங்களும் ஒரு காரணம்.

11:03 AM  

Post a Comment

<< Home