Sunday, October 02, 2005

உதவி

எனது நண்பனின் தந்தை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. உதவுபவர் ஒ + ரத்த வகையைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தகவல் தெரிந்தவர்கள் தயவுசெய்து ஜிமெயிலில் rameshl என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

Thursday, September 22, 2005

ரீட்டா

ரீட்டான்னு ஒருத்தி டெக்ஸஸைப் பார்த்து 'பப்பரப்பா'னு தலையை விரிச்சிப்போட்டுகிட்டு வந்துகிட்டு இருக்காளாம். அதனால எங்களை ஊரைக் காலி பண்ண சொல்லிட்டாங்க. இப்ப கொஞ்சம் தள்ளி இருக்கிற 'சான் ஆன்டானியோ' ங்கிற ஊர்ல சில நண்பர்களோட இருக்கேன்.

கொஞ்ச முன்னால 'காட்ரினா'னு ஒருத்தி போட்டு ஆட்டுன ஆட்டுல எல்லாம் கழண்டு போய் உக்காந்திருக்காங்க இப்ப திரும்பவும் இண்ணொண்ணு. கடவுள்தான் காப்பாத்தணும்.

Thursday, August 18, 2005

அமெரிக்காவில் அடியேன்

இங்கே வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. ஹூஸ்டன் நகரத்தில் ஒரு மாத வேலை. அதனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அவ்வப்போது எழுத முயற்சிக்கிறேன். இந்தியா வந்ததும் எழுத நிறைய விஷயங்கள் உள்ளன.

Tuesday, August 09, 2005

உயர்வு நவிற்சி

உண்மையில் நான் கோதை என்ற கவிஞியின் ரசிகன். மனதில் துளி கூட கலப்பில்லாத அன்பு இருந்தாலேயொழிய அவ்வளவு காதலாக பாட்டு எழுத முடியாது. பெண்களுக்கு நமது சமூகத்தில் முன்பு இருந்த கருத்துச் சுதந்திரத்தையும் அவருடைய பாடல்கள் எனக்கு எடுத்துக்காட்டின.

மேலும் அவருடைய பாடல்களில் உள்ள வளமையும் மனதைக் கவரக்கூடியது.

என் பள்ளி நாட்களில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, பாடப் புத்தகத்தில் உள்ள பாடல் ஒன்று கீழ்வரும் அர்த்தத்தில் இருந்தது,

"பகற்கால வானத்தைப் பார்த்தால் கிழிந்த கூடாரம் போல இருக்கிறது. வானம் கூடாரம் போலவும் மேகங்கள் கிழிசல்கள் போலவும் இருக்கின்றன.

இரவுக்கால வானத்தைப் பார்த்தால் செல்லரித்த குடை போல இருக்கிறது. வானம் குடை போலவும் நட்சத்திரங்கள் சிறு சிறு துளைகளாகவும் தெரிகின்றன"

(கவிஞர் பெயர் மறந்துவிட்டது)

இதை நான் படித்துக்கொண்டிருந்தபோது என்னுடய அம்மா கேட்டுவிட்டு (இப்பாடலை எழுதியது நீங்களாக இருந்தால் இதற்கு மேல் இந்தப் பத்தியைப் படிக்க வேண்டாம்) "யார்டா இவன் சுத்த தரித்திரம் பிடித்தவனாக இருக்கிறான். உவமையைப் பார் கிழிந்த கூடாரமாம், செல்லரித்த குடையாம். இப்பிடி எழுதினா விளங்குமா?" என்றார்.

"யாராவது வறுமையில் வாடும் கவிஞனாக இருந்திருப்பான்" என்றேன்.

அம்மா "அதற்காக இப்படியா! பாரதியாரைப் பார் இதே வானத்தை கருநீலப் பட்டின் மேல் வைரங்கள் பதித்தது போல் என்று வர்ணித்தார். எண்ணங்கள் எப்போதும் உயர்வாக இருக்க வேண்டும்." என்றார்.

கோதையினுடைய பாடல்கள் எப்பொழுதும் உயர்வானதாகவே இருக்கும். படிக்கும் பொழுதே மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

"நெற்க்கதிர்கள் செழித்து வளரும், பாற்க்குடங்கள் நிரம்பி வழியும்"

என்றெல்லாம் வாசிக்க மனதிற்கு மிக்க இனிமையாக உள்ளதா இல்லையா?

Monday, August 08, 2005

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பல நூற்றாண்டுகளுக்கு முன் இதே ஆடிப்பூர நன்னாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) மகளாக அவதரித்தாள் கோதை. கடவுளை வணங்கக்கூடிய ஆறு வித 'பாவங்களில்' சிறந்ததாகக் கூறப்படும் 'மதுர பாவம்' என்னும் காதல் பாவத்தில் தன்னை நிறுத்தி காலத்தால் அழியாத 'திருப்பாவை' மற்றும் 'நாச்சியார் திருமொழி' யை அருளி, ஸ்ரீரங்கநாதராலேயே தம்மை 'ஆண்டாள்' என்றழைக்கப்பட்ட 'சூடிக்கொடுத்த சுடர்கொடி' யின் பத்ம பாதங்களுக்கு புகழ் சேரட்டும்.

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!


Saturday, August 06, 2005

பொன்னியின் செல்வன்

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் சுமார் 1037 ஆண்டுகளுக்கு முன்னால் வீரநாராயண(வீராணம்) ஏரிக்கரையோரம் ஆடிப்பெருக்கு திருநாளன்று முன்மாலை நேரத்தில் தொடங்கும் அந்தப் புதினம் தமிழ் இலக்கிய வரலாற்றின் மிகச்சிறந்த படைப்புக்களுள் ஒன்று. ஐயத்திற்கு இடமின்றி தமிழகத்தின் தலைசிறந்த சரித்திர நாவல் அதுவே. மாமன்னன் ராஜராஜ சோழனின் இளமை கால நாட்களை விவரிக்கும் அந்த நாவல் லட்சக்கணக்கானோரை சோழ குலத்தின் விசுவாசிகளாய் மாற்றி அமைத்திருக்கிறது.

நாவல் என்றாலும் அது முழுக்க கற்பனை அல்ல. பல்வேறு கல்வெட்டுக்களையும், செப்புப்பட்டயங்களையும் படித்துணர்ந்து, கதைக்களத்திற்குச் சென்று பார்வையிட்டு, பல்வேறு நூல்களை ஆராய்ந்து அமரர் கல்கியால் வார்க்கப்பட்ட அற்புதப் படைப்பு.

அதை படிக்கும் பொழுதெல்லாம் இத்தகைய சிறந்த பண்பாடு, அறம், திறம் கொண்டிருந்த நாம் அதே காலகட்டத்தில் காட்டு விலங்கைப்போல் வாழ்ந்து கொண்டிருந்த பரங்கியரிடம் பின்னாளில் அடிமைப்பட்டு கிடக்க வேண்டிய நிலையேற்பட்டதை நினைத்து மனம் வெதும்பும்.

என்னுடைய கருத்துப்படி அந்த நிலைக்கு காரணம் இஸ்லாமியக் கொள்ளையர்களே. அவர்களை விரட்டியடிக்கக்கூடிய திண்மையுள்ள மன்னர் எவரும் வட இந்தியாவில் இல்லாதது நமது துரதிருஷ்டம். முகாலயப் படையெடுப்புக்கள் நம்முடைய கலாச்சாரத்திற்குப் பெரும் வீழ்ச்சியைத் தந்தது. பல்கலைக்கழகங்கள் எரியூட்டப்பட்டன. காலம் காலமாக நமது மண்ணில் உருவான சாஸ்திரங்கள்(sciences) நிராகரிக்கப்பட்டன. அத்துடன் நமது அறிவியல் வளர்ச்சி தடைபட்டது. சமூக முறைகள் உருக்குலைந்தன. சிதைந்திருந்த நமது சமூகத்தின் மீது ஐரோப்பியர்களின் அடுக்கடுக்கான படையெடுப்புக்கள் நிகழ்ந்தன. நல்ல கலாசாரத்தை போதிப்பதாக நினைத்துக்கொண்டு பரங்கியர்கள் தங்களுடைய கல்வியையும், மதத்தையும் புகுத்தினர். இப்படி பல நூற்றாண்டுகளாக இடி மேல் இடியாக வாங்கி வாழ்வியல் உச்சத்திலிருந்த நாம் அதல பாதாளத்தில் விழுந்து இன்று தட்டுத்தடுமாறி மேலை நாடுகள் காட்டிய வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.

என்ன குடிமுழுகிவிட்டது இப்பொழுது நன்றாக தானே முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம், உண்மை ஆனால் சரியான வழியில் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ஏன்? எவ்வாறு? என்று கேட்டால் பதிலே ஒரு பெரும் பதிவாக இருக்கும் அதனால் அதைப்பற்றி இப்பொழுது கூறப்போவதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம் இதே வழியில் சென்றால் நமது கலாசாரத்திற்கு அடிநாதமான நெறிகளை மறந்து பணத்திற்காக எதையும் செய்யும் அடிப்பொடி கூட்டமாகத்தான் இருப்போம்.

ராஜேந்திர சோழனைப் பற்றி 'த வீக்' வார இதழ் குறிப்பிட்டிருந்தது தான் நினைவுக்கு வருகிறது. "ராஜேந்திரன் கீழைக்கடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்த அதே காலகட்டத்தில் தான் கொள்ளையன் கஜினி முகமது தன் இந்தியப் படையெடுப்புக்களை தொடங்கியிருந்தான். அச்சோழப்பேரரசன் மட்டும் வடக்கேயுள்ள ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்திருப்பானாகில் இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்."

Friday, August 05, 2005

முதல் தமிழ்ப்பதிவு

ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பா வைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந் நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்


என்ற ஆண்டாளின் இனிய பாசுரத்தை நினைவு கூர்ந்து என்னுடைய தமிழ்ப்பதிவுகளைத் துவங்குகிறேன்.